பொது ராசி பலன் - மேஷம்

சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு மாதம் அமர்ந்து பலன்களைத் தருகிறார். பன்னிரண்டு ராசிகளையும் 360 டிகிரி என்று வைத்துக் கொண்டால், முதல் 30 டிகிரியில் மேஷ ராசி இடம் பெறும். இந்த ராசியில் இருந்துதான் சூரியனின் ஒளிப் பயணம் தொடங்குகிறது.

மேஷ ராசியில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன. இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி வழியாக உற்றுப் பார்க்கும்போது, மேஷம் என்னும் ஆட்டின் வடிவம் தெரிவதைப் பார்க்கலாம். ராசி மண்டலத்தை மனித உடலாக உருவகப்படுத்தினால், மேஷத்தை கபாலம் என்று சொல்லலாம். மேஷத்தில் பிறந்த நீங்கள், சிங்கம்போல இருப்பீர்கள். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும், குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் 5-ம் இடம், சிம்ம ராசிக்கு உரியது. அதற்கு அதிபதி சூரியன். எனவே, உங்களைவிட உங்கள் பிள்ளைகள் புத்திக்கூர்மையும், செல்வ வளமும் பெற்றிருப்பார்கள்.

செவ்வாய் அதிபதியாக ஆட்சி செலுத்தும் இந்த மேஷ ராசியில்தான் சூரியன் உச்சம் பெறுகிறார். இந்த ராசியில் பிறந்தவர்களிடம் செவ்வாயின் தாக்கம் மிகுந்திருக்கும். நான்கு சகோதரர்களுக்கு இடையில் நீங்கள் பிறந்திருந்தாலும், உங்களின் அறிவு பலத்தால் நீங்களே முதல்வராக இருப்பீர்கள். ஆனாலும், உடன்பிறந்தவர்களிடம் அதிக அன்புடன் இருப்பீர்கள். சில நேரங்களில், உடன் பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்ளவில்லையே எனும் ஆதங்கமும் எழும்.

அதேபோன்று, பூமிகாரகனாகிய செவ்வாயின் ராசியில் பிறந்தவர்கள் என்பதால், சொந்த நிலம் வாங்கும் யோகம் உண்டு. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டுக்கும் சுக்கிரன் அதிபதியாகிறார். ஆகவே, கலைகளில் நாட்டம் இருக்கும். பழைமை விரும்பிகளாகவும் திகழ்வீர்கள். அதிலும் முன்னோர்கள் நினைவுகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பொக்கிஷம் போன்று பாதுகாத்து வருவீர்கள். மண் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

சுற்றியிருப்பவர்களிலேயே உங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களும் உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களை இனம் கண்டறிவதிலும் கவனம் செலுத்துவது அவசியம். இந்த ராசிக்காரர்களிடம் கிரகிக்கும் தன்மையும், கற்றுக்கொள்ளும் வேகமும் அதிகம் இருக்கும். வேலையிலும் வெகு சீக்கிரம் சாதனை படைப்பார்கள். பலநூறு பேருக்கு மத்தியில் வேலை செய்தாலும், சட்டென்று அனைவரது  கவனத்தையும் தன்பக்கம் ஈர்க்கும் ஆற்றல் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு. உங்களில் பலரும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில் இருக்க மாட்டார்கள். படித்த துறை வேறாகவும், பணி புரியும் துறை வேறாகவும் இருக்கும். மற்றவர்களிடம் உதவி கேட்பது, எடுத்துக்கொள்ளும் பணியில் முடிவு வரையிலும் ஆர்வம் காட்டாமல் கோட்டைவிடுவது, எதிரிகளின் பலத்தை கணிக்காமல் செயல்படுவது ஆகியன உங்களுக்கான மைனஸ் விஷயங்கள். இவற்றைத் தவிர்க்கப் பாருங்கள்.

சில விஷயங்களை சிலரால்தான் முடிக்க முடியும் எனும்போது அவரிடம் உதவி கேட்பதில் தவறு இல்லை. வீண் தயக்கமே உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும். ஆகவே தயக்கத்தை தகர்த்தெறியுங்கள். எடுத்த காரியத்தில் விடாப்பிடியாக செயல்பட்டு வெற்றி பெறுங்கள். பொதுவாகவே மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் உங்களுக்குப் பிடித்தமானதாகத் திகழும். அப்படியான சூழலில் அமைந்த தலங்களில், உங்கள் ராசிநாதனான செவ்வாயை வழி நடத்தக்கூடிய தெய்வத்தை நீங்கள் தரிசிக்கும்போது, உங்கள் வாழ்வு மலையளவு உயரும் என்பது உறுதி. ஆமாம்! உங்கள் ராசிக்கு உகந்தவை மலைத் தலங்கள். அதிலும், முருகன் அருளும் மலைத்தலங்களைத் தரிசித்து வந்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். குறிப்பாக,  பழநி திருத்தலம். தனித்தன்மை பெறவேண்டும் என்ற தாகத்தோடு முருகப்பெருமான் வந்து அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலம்  பழநி. ஆகவே, எப்போதும் உங்கள் உள்ளத்தில் பழநி முருகனை நிறுத்துங்கள். மேஷ ராசிக்காரர்கள் இந்தத் தலத்துக்கு எப்போது சென்று வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்றமும் நிச்சயம் உண்டு.

[hfe_template id='1166'] https://nithyasubam.in/blog/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d/?feed_id=140&_unique_id=66418bc71756c

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil