Arunagirinathar History in Tamil - அருணகிரிநாதர் வரலாறு

[ad_1] Arunagirinathar History in Tamil அருணகிரிநாதரைப் பற்றி ஒரு ஸ்பெஷல் கட்டுரை நல்லவனா நடிக்கிறதுலேயே என்னோட ஒட்டுமொத்த கெட்டிகாரத்தனமும் போயிடுமோனு கவலைப்பட ஆரம்பிச்சாக்கூட போதும். கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்குள்ளே ஒரு நல்ல மாற்றம் வரும். ஆன்ம தேடல் , ரொம்ப அவசியம். வாழ்க்கை முழுவதுமே ஒரு நடிப்புலேயே போயிடப்போகுது.. சீக்கிரம் உஷாராகுங்க.. நல்லவன்கிற போர்வை போர்த்திதான் எல்லாருமே நடமாடுறாங்க. சந்தர்ப்பம் அமையாதானு தப்பு செய்ய மனசு ஏங்கும். மாட்ட மாட்டோம்னு தெரிஞ்சா தப்பு செய்வோம். அதுக்கு அப்புறம், கொஞ்ச நாள் கழிச்சு – அந்த தப்புக்கு , நமக்கு வேதனை ஆரம்பிக்கும். இதுதான் வாழ்க்கை. இதை மாயை அப்படின்னு சித்தர்கள் சொல்றாங்க. கடவுள் நிஜமாகவே இருக்கிறாரா.. இல்லையா..? இந்த குழப்பம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கு. ஒருவேளை , அவர் இருந்து , நாம அவரை கும்பிட்டு, அவர் அருள் கிடைச்சாப் போதுமே, நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்துடாதா.. இப்படி நினைச்சுத்தான், கோவில்கள்ளே இன்னைக்கு கூட்டம் வருது. கடவுளை பார்த்ததா சொல்றவங்க – கதை எல்லாம் , நம்பவும் முடியலை , நம்பாம இருக்கவும் முடியலை ரகம் தான். ஆனா, இப்போ ரொம்ப சமீபமா – ஐந்து , ஆறு நூற்றாண்டுகள் முன்னாலே வாழ்ந்த அருணகிரிநாதர் , சென்ற நூற்றாண்டு பட்டினத்தார் , வள்ளலார் , ராமகிருஷ்ணர் , பாம்பன் சுவாமிகள் – இப்படி மகான்கள் கடவுளை தரிசிச்சு இருக்கிறாங்க.. அவங்க பொய் சொல்லி , மக்களை ஏமாத்தணும்னு அவசியமே இல்லை. அதனாலே , உங்க பக்திமேலே நம்பிக்கை வைங்க. உங்களுக்கும் கடவுள் அருள் கிட்டும். அப்படி, இறைவனை நேரில் தரிசித்த அருணகிரிநாதரைப் பற்றி ஒரு ஸ்பெஷல் கட்டுரை இன்னைக்கு. ஒரு பழைய புத்தகத்திலேருந்து எடுத்தது. அப்படியே உங்க கிட்டே பகிர்ந்துக்கிறேன். இன்னைக்கு இருக்கிற ஒவ்வொரு சராசரி மனுஷனுக்கும் இருக்கிற உணர்வுகள் உள்ள ஒரு மனுஷனுக்கு – முருகன் அருள் எப்படி கிடைச்சதுன்னு பாருங்க.. அருணகிரிநாதர் வரலாறு அருணகிரிநாதர், கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது, இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறிகொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு. என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார்”. என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி! நில்!” என்றும் சொன்னார். திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே!” என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று. அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான். மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்?” என்று கேட்டான் மன்னன். சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப்பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர். தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோவிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம், பேரொளி ஒன்று அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அருணகிரியார் காலி விழுந்து மன்னிப்பு கோரினான். சம்பந்தாண்டனை மன்னித்து விட்டு, மன்னனையும் சம்பந்தாண்டனை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டார். Also, read [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/arunagirinathar-history-in-tamil-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1/?feed_id=3209&_unique_id=6758d6407ebdc

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை